சென்னை

மிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பத்திர தடைக்கு பிறகும் பாஜக நிதிகளை குவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியான தகவலின்படி, பா.ஜ.க. நேரடியாக ரூ.2 ஆயிரத்து 244 கோடி நன்கொடையை 2023-24-ம் ஆண்டு பெற்றிருக்கிறது. கடந்த 2022-23-ல் தேர்தல் பத்திர நன்கொடை மூலம் பெற்றதைவிட 212 சதவீதம் அதிகமான நிதியை பா.ஜ.க. பெற்றிருக்கிறது.

தேர்தல் பத்திர நன்கொடை திட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறையை பயன்படுத்தி தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதியை நேரடியாக பெற்றிருப்பதை இந்த தகவல் உறுதிப்படுத்துகிறது.

பா.ஜ.க.வின் ஊழல் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமாகி உள்ளது. உச்ச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை தடை செய்தும் பா.ஜ.க. நிதி பெறுவதற்கு எந்த தடையும் இல்லாமல் நிதிகளை குவித்து வருகிறது. பா.ஜ.க. குவித்து வருகிற நிதி இந்திய ஜனநாயகத்திற்கு குறிப்பாக, தேர்தல் களத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு மிகவும் பாதிப்பாக அமைகிற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்வது இந்தியாவின் ஜனநாயகத்திற்கே பெரும் ஆபத்தாக முடியும்”

என்று தெரிவித்துள்ளார்.