துரை

தாம் பேசும் போது இடையில் எழுந்து செல்வோரைப் பயமுறுத்தும் வகையில் செல்லூர் ராஜு பேசி உள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

அதிமுக தமிழகம்,புதுவையில் 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. இதில் மதுரை மக்களவை தொகுதியில் டாக்டர் சரவணன் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இன்று மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செல்லூர் ராஜு பேசிக் கொண்டிருந்தபோது அ.தி.மு.க.,வினர் சிலர் கூட்டத்தில் இருந்து கலைந்து செல்ல ஆரம்பித்தனர். எனவே கூட்டத்தில் இருந்து எழுத்த தொண்டர்களை அமருமாறு நிர்வாகிகள் மேடையில் இருந்து அறிவுறுத்தினர்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,

”இப்போது நான் பேசத் துவங்குகிறேன். நான் கூட்டத்தில் பேசும்போது இடையில் யாரும் பேசக்கூடாது. நடுவில் எழுந்து போகக்கூடாது. மீறிப் போனால் வீடு போய்ச் சேர்வதற்குள் ரத்தம் கக்கி சாவீர்கள். 5 நிமிடம் நேரம் தருகிறேன். அப்போது எழுந்து போகலாம். நான் ஒரு மந்திரம் போட்டு விட்டுத்தான் கூட்டத்திற்கு வந்தேன் ”

என்று பேசினார்.

கூட்டத்தில் இருந்தவர்கள் செல்லூர் ராஜு விட்ட சாபத்தால் முதலில் பீதி அடைந்து, பின்னர் நகைச்சுவையை உணர்ந்து வாய்விட்டுச் சிரித்தனர்.