கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே திமுக முன்னாள் உறுப்பினர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்மூலம் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்தாலும், போதை பொருள் விற்பனை சென்னை, கோவை போன்ற நகர்ப்புறங்களிலும் கொடிகட்டி பறக்கிறது.
சென்னையில் பள்ளி, கல்லூரி அருகே, காவல்வாய் ஓரங்களில் உள்ள குடிசைப்பகுதிகளில் போதை பொருள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. போதை பொருள் விற்பனையில், அரசியல் கட்சிகளைச் சார்ந்த ரவுடிகள் ஈடுபட்டு வருவதால், அவர்களை கைது செய்வதில் காவல்துறை தயக்கம் காட்டி வருகிறது. இதனால், போதை பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துகாணப்படுகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கோவை, மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகரில் தனிப்படை மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
இந்தந நிலையில், காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாககிடைத்த தகவலைத் தொடர்ந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர், காந்திபுரம் பேருந்து நிலைய கழிப்பிடம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களிடம் சோதனை நடத்தினர்.
அப்போது அவர்கள் தங்களின் உடலின் பல பகுதிகளில், உயர் ரக போதைப் பொருளான மெத்தபேட்டமைன் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதை பொருட்கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.