சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறி ரயிலில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், அந்த பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில், 2002ம் ஆண்டின் பண மோசடி சட்டத்தின்படி விசாரணை நடத்துவது குறித்து, ஏப்ரல் 24ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி அன்று மாலை சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த சென்ற நெல்லை விரைவு ரயிலில் தாம்பரம் அருகே ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் அந்த பணத்தைச் எடுத்துச்சென்ற சதீஷ், பெருமாள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட உள்ளதாக கூறினர். இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுவிசாரணைநடைபெற்றுவருகிறது.
இதற்கிடையில், , திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யுமாறு சுயேட்சை வேட்பாளர் ராகவன் வழக்கு தொடுத்திருந்தார். இந்த நிலையில், மனுவில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வலியுறுத்தியும், நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியதுடன், திமுக மாவட்டச் செயலாளரிடம் 28.51 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 22) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்த விசாரணையின்போது, அமலாக்கத்துறை தரப்பில், ‛‛தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது’ எனக் கூறி விசாரணை நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக தமிழ்நாடு காவல்துறையும் உத்தரவிட்டது.
இதையடுத்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு பதிலாக அவருடைய வழக்கறிஞர் தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி மனு அளித்தார்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை வரும் 24ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.