சிறப்புக்கட்டுரை:   அமெரிக்காவில் இருந்து மருத்துவர் சந்திரலேகா

 ‘உனக்கு அப்பாலாம் இருக்காங்களா ?’ என்று ஜெயம் ரவி ஒரு படத்தில்  ஜெனிலியாவை பார்த்து கேட்பது போல தான் பெரும்பாலான இந்தியர்கள், அமெரிக்கர்களுக்கு கலாச்சாரம் எல்லாம் உண்டா என்று ஆச்சரியமாக கேட்பார்கள். குடும்ப அமைப்பின் மேல் நம்பிக்கை அற்றவர்கள், கூடி வாழும் குணமில்லா, தனித்த வாழ்க்கையை விரும்புவர்கள் என்ற பொது புத்தியின் காரணமாக எழும்  கேள்வி அது.

உடலும் மனமும் பலவித மாறுதல்களுக்கு உள்ளாகும் பேறுகாலத்தில் தாயிற்கும் தந்தைக்கும் ஆலோசனைகளும், மனோபலமும் தந்து மகிழ்ச்சிப்படுத்தும் சீமந்தம் போன்ற விழாக்கள் எல்லா கலாச்சாரங்களிலும் உண்டு. அமெரிக்காவிலும், ‘பேபி ஷவர்’ (Baby Shower) என்னும் பெயரில்.

அமெரிக்கர்களை பொறுத்துவரை ‘பேபி ஷவர்’ ஒரு அதிமுக்கிய பண்பாட்டு கூறாக, நண்பர்களுக்காக, நண்பர்களால், நண்பர்களுடன் நடத்தப்படும் விழாவாக இருக்கிறது. குழந்தை பெற போகும் தம்பதியினரின் நெருங்கிய நண்பர்கள் இணைந்து திட்டமிட்டு யாரோ ஒருவரின் வீட்டில் நடத்துவது வழக்கம். அதை எப்படி செய்கிறார்கள் என்று நாமும் தெரிந்து கொள்வோமே!

பெண் சிசுக்கொலை போன்ற பிரச்சினைகள் இல்லாததால் குழந்தை ஆணா பெண்ணா என்று சொல்வதில் அமெரிக்காவில் சட்ட சிக்கல்கள் ஏதும் இல்லை. பெற்றோர் அறிய விரும்பினால் ஸ்கேன் செய்யும் போது மருத்துவர் நேரிடையாக சொல்லி விடுவார். பின்னர் குடும்பத்தாரையும் நண்பர்களையும் அழைத்து ‘பாலின அறிவிப்பு’ (Gender Reveal) பார்ட்டி ஒன்றை வீட்டிலேயே நடத்தி பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை  அறிவித்து விடுகிறார்கள். இங்கு பெண் குழந்தை என்றால் பிங்க் நிறம் , ஆண் குழந்தை என்றால் நீலம் என்பது எழுதப்படாத சட்டம். உடையில் ஆரம்பித்து, காலணிகள், பாட்டில், பை, சாக்ஸ் என்று எல்லாமும் அதே நிறத்தில் அணிவிப்பார்கள். மற்ற நிறங்களில் நாம் விரும்பி தேடினாலும் கிடைக்காது. கடல்லேயே இல்லையாம் கதை தான்.

பாலின அறிவிப்பு விழாவில் வெள்ளை நிற க்ரீம் கொண்டு மூடிய கேக்கை வெட்டும் போது உள்ளே நீலமோ, பிங்க் நிறமோ உள்ள கேக் வெளிப்பட்டு அனைவருக்கும் செய்தி சேரும். இந்த நிகழ்விற்கு பின் ஒரு நாளில் பேபி ஷவர் நடத்தப்படும்.

அலங்காரம்: பேபி ஷவரில் பிராதானமாக, சிரத்தை எடுத்து செய்யப்படுவது விழாவுக்கான அலங்காரமே. பலூன்கள், பிற அலங்கார பொருட்கள், மேசை விரிப்பு என்று எல்லாமே குழந்தையின் பாலினத்திற்கு ஏற்ப பிரத்யேக நிறத்தில் முழுக்க முழுக்க இழைக்கப்பட்டு இருக்கும். குழந்தையின் பாலினம் தெரியாவிட்டால் பொதுவான வேறு நிறங்களில் அலங்காரம் செய்யப்படும். ஒரு குறிப்பிட்ட மையக்கரு (theme) அடிப்படையில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள், யானை, ஒட்டகச்சிவிங்கி என விலங்குகள், முதலிய அலங்காரங்களும் செய்யப்படுவது உண்டு. பலூனில் ஆரம்பித்து தட்டு, தண்ணீர் பாட்டில், ஸ்பூன், நேப்கின் என்று எல்லாமும் ஒரே நிறத்தில், மையக்கருவை ஒட்டியே இருக்கும்.

நம்மூர் சீமந்தத்தில், சீர் வரிசை தட்டுகளை அழகாக வித விதமாக அடுக்கி வைப்பது போல  இங்கும் காட்சிக்காக ‘சென்டர் பீஸ்’ (center piece) என்று ஒரு மேசையில் ரசனையுடன் அலங்கரிக்கப்பட்ட பலவித பொருட்கள் வைக்கப்படும். பலூன்களால் செய்யப்பட்ட உருவங்கள், பூ அலங்காரங்கள், வண்ண தாள்களால் சுற்றப்பட்ட சாக்லேட்கள், சிறு கப் கேக்குகள், மெழுகுவர்த்திகள் என்று அழகுற அடுக்கி வைப்பார்கள். இதற்கு நடுவில், நட்ட நாயகமாக ‘டயப்பர் கேக்’ (Diaper cake) வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயப்பர்களை கொண்டு இரண்டு அல்லது மூன்று அடுக்கு கேக்கு போல அமைத்து அதை வண்ண ரிப்பன்கள், லேஸ்கள்,பொம்மைகள் கொண்டு அலங்கரித்து அவற்றின் இடை இடையே குழந்தைக்கு தேவைப்படும் பால் பாட்டில், சோப்பு, சீப்பு, ஷாம்பூ, துவாலை,உடை என்று பலவிதமான பரிசுகளையும் சேர்த்து விடுகின்றனர். பார்க்க மிக ரம்மியமாக இருக்கிறது.

தொட்டில்,குளியல் தொட்டி, டிராக்டர் என்று பல வடிவங்களிலும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப இந்த டயப்பர் கேக் செய்யப்படுகிறது. இந்த அலங்கார பொருட்களுக்கென தனியான கடைகளும் உண்டு. சில இடங்களில் டயப்பருக்கு பதிலாக டாலர் நோட்டுகளாலும் இந்த வடிவங்கள் செய்யப்படுவது. இந்தியாவில் பெரும்பாலும் பிறக்க போகும் குழந்தைக்கு பரிசு கொடுக்கும் வழக்கம் இல்லை. தாய்க்கு பிடித்ததை தான்  செய்து தருவார்கள். பேபி ஷவரிலோ குழந்தைக்கு தான் எல்லா பரிசு பொருட்களும். குழந்தை பெற போகும் தம்பதியர் வந்ததும் அவர்களுக்கு ‘அம்மா ஆக போகிறவர்’, ‘அப்பா ஆக போகிறவர்’ என்று எழுதப்பட்ட கிரீடம், ஆடையில் குத்தி கொள்ளும் பேட்ஜ், டை போன்றவை அணிவிக்கப்பட்டு அவர்களுக்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட இருக்கைகளில் அமர வைக்கப்படுவார்கள். பலூன்கள் வெடித்து, வாழ்த்துகளுக்கு இடையே கேக் வெட்டுவதும் நடக்கும்.

உணவு: பட்டாசு இல்லாம தீபாவளியா? சோறு இல்லாமல் சந்திப்பா ? ஆளுக்கு ஒரு வகை சமைத்தோ வாங்கியோ கொண்டு வரும் ‘பாட் லக்’ (Pot luck) முறையில் கொண்டு வரும் வித விதமான உணவு வகைகள் பேபி ஷவரில் இடம்பெறும்.  ஃபிங்கர் ஃபுட்ஸ் (Finger foods) எனப்படும் நாசூக்காக கையால் எடுத்து சாப்பிடும் வகையிலான சான்ட்விச், கப் கேக்கள், பொம்மை அல்லது பாத வடிவிலான குக்கீஸ், சீஸ், சாலட், பலவகை பழங்கள் போன்ற உணவுகளே அதிகம் இடம்பெற்று இருக்கும். குழந்தை, தொட்டில் வடிவில் அமைக்கப்பட்ட வேக வைத்த முட்டைகள், பழ அலங்காரங்கள் பார்த்தால் சாப்பிடவே மனது வராது.

போட்டிகள்: பேபி ஷவரில் பல விதமான விளையாட்டுகள் உண்டு. விதவிதமான சாக்லேட்களை உருக்கி டயப்பர்களில் வைத்து ஒவ்வொன்றாக நக்கி பார்த்து என்ன வகை என்று கண்டுபிடிக்கும் விளையாட்டு, தலைக்கு மேல் பேப்பர் தட்டுகளை வைத்தபடி குழந்தை உருவத்தை வரைவது, ஆண்கள் எல்லாம் கண்ணை கட்டியபடி இருக்க அவர்களின் துணைகள் குழந்தைகளுக்கான உணவை வேகமாக ஊட்டி விடும் பந்தயம், குழந்தை பொம்மைக்கு அதிவேகமாக டயப்பர் மாற்றும் போட்டி, வயிற்றில் பலூனை கர்ப்பம் போல கட்டிக்கொண்டு குழந்தை போல பிரசவித்து காட்டும் விளையாட்டு என ஆண்களை டேமேஜ் செய்யும் வினோத போட்டிகளே அதிகம். ஒரு பால் புட்டியில் சிறு மிட்டாய்கள் நிரப்பி, மொத்தம் எத்தனை இருக்கிறது என்று கணிக்க சொல்வது, பரிசு பொருட்களின் விலையை கணிக்க சொல்வது போன்ற விளையாட்டுகளும் உண்டு.

வாழ்த்து கிணறு (Wishing well):  பிறக்க போகும் குழந்தைக்கும், பெற்றோருக்கும் சீட்டுகளில்  வாழ்த்து, அறிவுரை, குழந்தை வளர்ப்பு டிப்ஸ்கள் எழுதி கிணறு போன்று வடிவமைக்கப்பட்ட பெட்டியில் போடுவதும் ஒரு பேபி ஷவர் சம்பிரதாயம். விருந்தினர் அனைவரும் தங்கள் பெயர்களை எழுத, கொடியில் காயும் துணி, மரம், இதயம், பலூன்கள் போல கத்தரிக்கப்பட்டு ஒட்டப்பட்ட தாள்களில் தங்கள் பெயர்களை எழுதும் ‘வருகை பதிவேடு’ (Guest book) ஒன்றும் வைக்கப்பட்டு இருக்கும். இதை, நினைவுச் சின்னமாக ஃபிரேம் செய்து வைத்து கொள்வார்கள்.

பரிசுகள்: முன்கூட்டியே கர்ப்பவதியிடம் அவர் விரும்பும் பரிசுகளை பட்டியலிட செய்து அவற்றை வாங்கி பேபி ஷவர் அன்று பரிசளிப்பது வழக்கம். பெரும்பாலும் குழந்தைக்கு தேவையான பொருட்களாக தான் இருக்கும்.

கட்டுரையாளர்: மரு. சந்திரலேகா

தாம்பூலம்: சீர் வரிசை கொண்டு வந்தவர்களுக்கு எதிர் வரிசை தர வேண்டும் அல்லவா? விருந்தினர் அனைவருக்கும் சிறு நினைவு பரிசுகள் தம்பதியரோ , விழாவை ஒருங்கிணைத்த நண்பர்களோ ஏற்பாடு செய்வார்கள். நம்மூரில், திருமணத்தில் வாழ்த்து அட்டையில், சாக்லேட் பின் செய்து தரும் நண்பர்களை போல, ‘வருகைக்கு நன்றி’ என்று அச்சடித்து கீ செயின், சிறு பொம்மைகள், ஃபிரிட்ஜ் மேக்னெட் போன்றவற்றை கோர்த்து விடைபெறும் போது தருவார்கள்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு நடத்தும் பேபி ஷவர் என்றால் சிறு அளவிலான பூஜைகள், இந்திய உணவுகள், ஆடல் பாடல் என்று கலாச்சார கலவையாக இருக்கும்.

சமீப காலங்களில், தந்தையாக போகும் ஆணுக்கு அவரது ஆண் நண்பர்கள் மட்டும் இணைந்து நடத்தும் ‘டேடி ஷவர்’ (Daddy shower) விழாவும் பிரபலமடைந்து வருகிறது. பார், மீன்பிடி துறைகள், துப்பாக்கி சுடும் காடுகள் போன்றவற்றில் இவை நடத்தப்படுகின்றன.

நாடு, மொழி, இனம், மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதராய் பிறந்தவர் அனைவரும் உணர்வுப்பூர்வமாக ஒன்றுபோல அணுகும் வாழ்வின் முக்கிய தருணங்கள் – பிறப்பு, திருமணம், இறப்பு. இம்மூன்றிலும் சுற்றமும் நட்பும் சூழ இருப்பதை தான் அனைவருமே விரும்புகிறார்கள்.