நாம் தமிழர் சீமானுக்கு சில கேள்விகள்….

Must read

1
1) 2011, 2014 வருடங்களில் தொடர்ந்து இரட்டை இலைக்கு ஊர் ஊராக சென்று கத்திப் பேசி வாக்கு கேட்டீர்கள். (காரணம் எதுவாக வேண்டும் இருக்கட்டும்) நீங்கள் வாக்கு கேட்டீர்கள், மக்கள் போட்டார்கள். அதிமுக இரண்டு தேர்தல்களிலும் வென்றது. கடந்த 5 வருடம் மக்கள் இந்த அரசாங்கத்தால் படு வேதனை அடைவதற்கு நீங்களும் ஒரு காரணம் என்பதை உணர்ந்தீர்களா? உங்களால் ஏமாற்றத்தை சந்தித்த மக்களிடம் நீங்கள் செய்த தவறுக்காக வருந்தி பகிரங்க மன்னிப்பு கேட்பீர்களா?
இலைக்கும், சூரியனுக்கும் ஓட்டு போட்டால் கையில் குஷ்டம் வரும் என்கிறீர்கள்.. இலைக்கு வாக்கு கேட்ட உங்களுக்கு வாயில் குஷ்டம் வந்து விட்டதா?
2) தமிழ்நாட்டை தமிழனே ஆளனும்! – சரி, ஐந்தாறு தலைமுறைகளுக்கு முன் உங்கள் பாட்டன் இப்போதைய கர்நாடக அல்லது ஆந்திர மாநில ஊர்களில் இருந்து இங்கு வரவில்லை என நீங்கள் நிரூபிக்க முடியுமா? முதலில் யார் தமிழன் என்பதை திட்டமாக வரையறை செய்வீர்களா?
இமயம் வரை பரவி வாழ்ந்தான் தமிழன் என்று சொல்கிறீர்கள்.. என்னுடைய முன்னோர்களின் தாய் மொழியும் முன்னொரு காலத்தில் தமிழாகவே இருந்தது என்று அம்பேத்கர் சொன்னார் என வழி மொழிகிறீர்கள்.. அப்படியிருக்க எல்லோரும் தமிழர்கள் தானே..!
3) இது ஜனநாயக நாடு.. இங்கு வந்து சர்வாதிகார (தன்னலமற்ற அன்பான) ஆட்சி முறை கொண்டு வருவேன் என்பது எந்த விதத்தில் நியாயம். சர்வாதிகாரம் என்று வந்த பிறகு எதற்கு தேவையில்லாத அடைமொழிகள் ‘தன்னலமற்ற’, ‘அன்பான’ என்று..? சில நாட்களுக்கு முன் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொதுமக்களில் ஒருவர் நீங்கள் அதற்கு முன் கூறிய ஒரு தவறான தகவலுக்கு விளக்கம் கேட்டபோது, அதற்கு உடனே “பொதுமக்கள் இதை என் கேட்கவேண்டும் (தலையிடவேண்டும்)? ” என உங்களுக்கு வந்த கோபம்தான் சர்வாதிகாரத்தின் வெளிப்பாடா?
உங்கள் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் “நாம் தமிழர் அரசு மக்களின் கருத்துக்கானது அல்ல, மக்களின் நலனுக்கானது” என்று… இதை விட ஒரு கேலிக்குரிய விஷயம் இந்த ஜனநாயக நாட்டில் இருக்க முடியாது என்று உங்களுக்கு உணரவில்லையா?
4) “… திராவிட கட்சிகள்தான் தமிழ் நாட்டை கடந்த 50 வருடமாக சீரழித்து விட்டது..தமிழர் அல்லாதவர் (உங்கள் கூற்றுப்படி) ஆண்டதால்தான் இந்த நிலைமை.. நான் வந்தால் எல்லாம் சிங்கப்பூர் போல் மாறிவிடும்..” என்று சொல்கிறீர்கள்.. சரி, நம் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திர, கர்நாடக மாநிலங்களை ஏன் அவர்களால் சிங்கப்பூராக மாற்ற முடியவில்லை.? அங்கே எந்த கட்சிகள் ஆட்சி செய்தது? நம் அண்டை மாநிலம் எல்லாம் வளர்ந்து நாம் மட்டும் அவர்களை விட கீழே இருந்தால் நீங்கள் சொல்லவதை ஒப்புக்கொள்ளலாம்… ஆனால் மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு பல விஷயங்களில் நன்றாக இருக்கிறது…(எல்லாமே சரியாய் இருக்கிறது என்றும் சொல்லவில்லை)
இது எதை காட்டுகிறது என்றால்.. உங்கள் சிற்றறிவுக்கு எட்டாத மிகப்பல காரணிகளும், வெவ்வேறு பிரச்னைகளும் இந்த நாட்டில் உள்ளது.. ஆட்சி மற்றும் வளர்ச்சி என்பது பல்வேறு காரணிகளை தொடர்பு படுத்தும் ஒரு சமன்பாடு ( multi factored complex equation ). அதில் ஒன்றை சரி செய்யும்போது மற்றொன்று பாதிக்கப்படும். எல்லாவற்றையும் ஒரே கையெழுத்தில் கொண்டு வந்து விட முடியாது.
உங்கள் செயற்பாட்டு வரைவில், நீர் மேலாண்மை மற்றும் வேளாண்மை தவிர மற்ற அனைத்து பக்கங்களிலும், உலக நாடுகள் பலவற்றிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை போட்டு.. அவற்றை முன்மாதிரி என்று மேற்கோள் காட்டி, அவை எல்லாவற்றையும் நடைமுறை படுத்துவோம் என்று சொல்வது மிக மிக அதீதமான ஒரு கற்பனை. ஏற்கனவே தமிழ்நாடு 4 இலட்சம் கடனில் இருக்கிறது, இந்த எல்லா கட்டமைப்புகளுக்கும் நேரமும், பொருளாதாரமும், பணியாளர்களும் எங்கிருந்து கிடைக்கப்பெறும். உங்கள் வரைவில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த திட்டங்களுக்கு எந்த ஒரு கால வரையறையும் கொடுக்கப்படாதது இவை எல்லாம் சாத்தியமில்லை என்பதால்தானா?
மற்ற நாட்டின் மாதிரிகளை விட்டு விட்டு, நம் மக்கள் தொகை, பொருளாதாரம், காலநிலை, முன்னுரிமை ( priority ), தேவை என எல்லாவற்றுக்கும் ஏற்ற திட்டங்களை முன் மொழியலாம். இந்த எல்லா காரணிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, எல்லாவற்றையும் நீங்கள் சொல்வது போல் மிக எளிதாக முடித்துவிட முடியாது.
எடுத்துக்காட்டாக, ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன் எதிரணி அதிக ரன் எடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டாம். அதை அவர் செய்ய ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட தீர்வுகளே ( limited options ) பல காரணிகளுக்கு உட்பட்டு அவருக்கு இருக்கிறது. 22 பேரை களத்தில் நிறுத்தி பந்தை தடுப்பேன் என்று நினைக்க கூடாது. அணியில் உள்ள 11 பேரையும் பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்வது தீர்வாகாது. சரி 5 பந்து வீச்சாளர்கள்தான், ஆனால் ஒவ்வொருவரும் தலா 2 விக்கட் கட்டாயம் எடுக்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த போட்டியில் விளையாட முடியாது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நிறைய விஷயங்கள் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும் அனால் நடைமுறை சாத்தியம் என்று ஒன்று உள்ளது.
ஆட்சி வரைவில் எங்கு திருப்பினாலும் “சிறப்பு படை அமைத்து கண்காணிக்கப்படும்” என்றுள்ளது, ஆனால் இன்னொரு பக்கத்தில் காவலர்க்கு எட்டு மணி நேரம் வேலை மட்டுமே. அப்படி பார்த்தால் ஒரு காவல் பணிக்கு 3 காவலர்கள் ஒரு நாளைக்கு தேவை. இப்பொழுது இருப்பதை விட 5 மடங்கு காவலர்கள் பணியில் சேர்க்கபடுவார்களா என்ன? இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான்.
இது போல் பல உள்ளது உங்கள் வரைவில். இன்னொன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன், “… பழைய பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படும், புதிய பேருந்துகள் வாங்கப்படும். பேருந்துகள், அரசு வாகனங்கள் அனைத்தும் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்க கூடியதாக மாற்றி அமைக்கப்படும். ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் மின்கலன் சேமிப்பு நிலையம் அமைக்கப்படும்..” இன்னும் நிறைய இருக்கிறது.
சந்தன கடத்தல் வீரப்பனுக்கு மணி மண்டபம் கட்டவேண்டும் என்ற உங்கள் புனித நோக்கம் (உங்கள் வரைவில் உள்ளது) நிறைவேற்றத்தான் தமிழர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து உங்களுக்கு ஒட்டுபோடுவார்களா.. என்ன ?
முதலில் நடக்க கற்றுக் கொள்ளுங்கள், அப்புறம் நடனம் ஆடலாம்!!
( தமிழன் முகநூல் பக்கத்தில் இருந்து..)

More articles

4 COMMENTS

Latest article