சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சீமான், நாளை அரசியல் பயணம் தொடங்க உள்ள நிலையில், கமல் என்னை சந்திப்பதை விட நான் அவரை சந்திப்பதுதான் நல்லது என நினைத்து வந்தேன்.
அவரது அரசியல் பயணம் புரட்சிகர அரசியல் பயணமாகவும், வெற்றிகரமாக இருக்க வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன் என்றார். மேலும் ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல்தான் என்றும் கூறினார்.
எங்கள் மண்ணின் மைந்தன் கமல், அரசியலுக்கு வருகிறார். சிறு வயதிலிருந்து அவரை பார்த்து ரசித்து வளர்ந்தவன் நான். அவரது அரசியல் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். புரட்சி கர மற்றும் வெற்றிகரமான அரசியல் பயணமாக இருக்க வாழ்த்துக்கள் என சீமான் தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தி கூறினார்.
மேலும் தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழன் தான் ஆள வேண்டும் என வைரமுத்து கூறியுள்ளார். அதைத்தான் நானும் கூறுகிறேன். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என சீமான் தெரிவித்தார்.
நாளை கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்க உள்ள நிலையில், சீமானின் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.