அலகாபாத்: அயோத்தி வழக்கில் அடுத்த 23 நாட்களுக்குள் இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்த அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுக்கி வருகிறது மத்திய அரசு.
உத்திரப்பிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது அயோத்தி. அந்த மாவட்டம் முழுவதும் ரகசிய உளவு அமைப்புகள் மற்றும் தீவிரவாத தடுப்பு சிறப்புப் படையினர் முகாமிட்டு வருகின்றனர் மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆளில்லா சிறிய விமானங்களும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. மேலும், சர்ச்சைக்குரிய நிலத்தை நோக்கி ஊர்வலமாக செல்வோரை தடுத்து நிறுத்தி நிலைமையை சமாளிக்க, மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தற்காலிக சிறைச் சாலைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கு நிலையைக் காப்பாற்ற, மத்தியப் போலீஸ் படைகள், மாநில ஆயுதப் படையினர், மத்திய ரிசர்வ் போலீசின் அதிரடிப்படை, உத்திரப்பிரதேச மாநில போலீஸ் உள்ளிட்ட மொத்தம் 153 கம்பெனிகள் பணியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் மாதம் ஓய்வுபெறவுள்ளார். எனவே, தனது இறுதி பணி நாளுக்கு முன்னதாக, அயோத்தி வழக்கின் தீர்ப்பை அவர் தலைமையிலான அமர்வு வழங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.