மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் செகந்திராபாத்-ஷாலிமர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த தகவலை தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “கொல்கத்தாவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள நல்பூரில் வாராந்திர சிறப்பு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தடம் புரண்ட பெட்டிகளில் ஒரு பார்சல் வேனும் இருந்தது. 22850 செகந்திராபாத்-ஷாலிமார் வாராந்திர எக்ஸ்பிரஸ் கரக்பூர் பிரிவின் நல்பூர் ரயில் நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது மூன்று பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்த்ராகாச்சி மற்றும் காரக்பூரில் இருந்து விபத்து நிவாரண ரயில்கள் மற்றும் மருத்துவ நிவாரண ரயில்கள் உதவிக்காக உடனடியாக அனுப்பப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளை கொல்கத்தாவிற்கு அழைத்து வர ஏராளமான பேருந்துகளும் அனுப்பப்பட்டுள்ளன.