கேரள மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.
கிட்டத்தட்ட பத்து மாதங்களாக சினிமா தியேட்டர்கள் அடைக்கப்பட்டிருந்தன.
50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி வழங்கினார்.
இதனால் 13 ஆம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன, சுமார் 500 தியேட்டர்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆனது.
அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் கும்பலாக கூடுவதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது.
இதையடுத்து கொச்சியில் உள்ள தியேட்டர்களை சுற்றிலும் மக்கள் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் மற்றும் அதற்கு மேல் ஆட்கள் திரள தடை விதிக்கப்பட்டுள்ளது.
“இளைஞர்கள் தியேட்டர் வளாகத்தில் கூடுவதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. கொரோனா இன்னும் நீங்கவில்லை. இவ்வாறு மக்கள் திரள்வது, வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கெடுதல் விளைவிக்கும், எனவே தடை உத்தரவு போட்டுள்ளோம்” என கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜு கூறி உள்ளார்.
இந்த தடை உத்தரவு எத்தனை நாட்கள் அமலில் இருக்கும் என தெரியவில்லை.
– பா. பாரதி