டெல்லி: குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரிலான ஒற்றுமையை யாத்திரையை மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தனது 2வது கட்ட யாத்திரையை தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. இந்த யாத்திரையானது, குஜராத் மாநிலத்தில் தொடங்கி மேகாலயா மாநிலம் வரை நடைபெற உள்ளது. இந்த தகவலை  மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023 ஜனவரி மாதம் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இந்த பயணம் குமரியில் தொடங்கி காஷ்மீரில் நிறைவடைந்தது.   சுமார் 4 ஆயிரம் கிமீ தூரம் வரையில் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிட்டியது.

இதையடுத்து, வடகிழக்கு மாநிலங்களில் மக்களின் ஆதரவை பெரும் வகையில், 2வது கட்ட  நடைபயணத்தை துவங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.  ராகுலின்  இரண்டாம் கட்ட நடை பயணம், குஜராத் மாநிலம் முதல் மேகாலயா மாநிலம் வரை மேற்கிலிருந்து கிழக்காக நடை பயணம் மேற்கொள்ள உள்ளார் என காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோலே கூறியுள்ளார். மேலும், மகாராஷ்டிராவிலும் இந்த நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். நடை பயணம் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நானா படோலே தெரிவித்தார்.