ஹைதராபாத்:
தேர்தல் கமிஷனுக்கு எதிராக கருத்து கூறிய ஆந்திர மாநில அமைச்சர் ராமச்சந்திர ரெட்டியை வீட்டுச்சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ஆளும் ஓஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி. ஆந்திர மாநில உள்ளாட்சி துறை, கிராமப்புற அபிவிருத்தி மற்றும் கனிம வள துறை அமைச்சராக பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி பொறுப்பு வகித்து வருகிறார்.

உள்ளாட்சித் தேர்தலை போட்டியின்றி நடத்தி முடிக்க ஆளும் கட்சி தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த 9ஆம் தேதி துவங்கி 4 கட்டங்களாக ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் பற்றிய மறைமுக வேலைகள் குறித்து தகவல் அறிந்த மாநில தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ், இம்மாதம் 21ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்து முடியும் வரை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி வீட்டை விட்டு வெளியில் வர தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் அமைச்சர் என்ற முறையில் நான் என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பேன் என்று அவர் கூறினார். மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவையும் அவர் கடுமையாக கண்டித்து பேசினார். இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி வீட்டைவிட்டு வெளியில் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த போலீஸ் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு தடைவிதித்தும் உத்தரவு உள்ளது. இதுதவிர எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தேர்தல் சமயத்தில் அவரால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது.எனவே அதிகாரிகள் சட்டப்படி செயல்பட வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் நிம்மகடா ரமேஷ் தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவிற்கு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.