செபி தலைவர் மாதாபி பூரி புச் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், தவறான வார்த்தைகளை கூறி வசைபாடுவதாகவும் செபி ஊழியர்கள் நிதி அமைச்சகத்தில் முறையிட்டுள்ளனர்.

ஹிண்டன்பெர்க் 2.0 அறிக்கையில் அதானி நிறுவனத்துடன் சேர்ந்து பணமோசடியில் ஈடுபட்டதாக மாதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் மீது சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியில் இருந்து தொடர்ச்சியாக மாதாபி பூரி புச் வருமானம் ஈட்டி வந்தது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த நிலையில், உதவி மேலாளர் மற்றும் அதற்கு மேலான பதவியில் உள்ள சுமார் 500 பேர் கையெழுத்துடன் கூடிய புகார் கடிதம் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உதவி மேலாளர் மற்றும் அதற்கு மேலான பதவியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வேலை செய்யும் நிலையில் பாதிக்கும் அதிகமானவர்கள் மாதாபி பூரி புச் மீது புகார் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘செபி அதிகாரிகளின் குறைகள் – மரியாதைக்கான அழைப்பு’ என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில், “ஊழியர்களிடம் கடுமையான மற்றும் தொழில்முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது, ஊழியர்களின் நிமிடத்திற்கு நிமிட நகர்வை கண்காணிப்பது மற்றும் யதார்த்தமற்ற பணி இலக்குகளை வழங்குவதுடன் அதை அவ்வப்போது மாற்றியமைப்பது” உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

மேலும், “ஆலோசனை கூட்டங்களில் கூச்சல், திட்டுதல் மற்றும் பொதுவாக அவமானப்படுத்துதல் வழக்கமாகிவிட்டன” என்றும் தெரிவித்துள்ளனர்.

இது மன ஆரோக்கியத்தை பாதித்து, வேலை-வாழ்க்கை சமநிலையை இழந்துவிட்டது என்று அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

நிர்வாகத்திடம் அளித்த புகார்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து தற்போது நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிஇருப்பதாக அதிகாரிகள் அதில் தெரிவித்துள்ளனர்.

செபியின் வரலாற்றில் அதன் அதிகாரிகள் நட்பற்ற ஊழியர் நடைமுறைகள் குறித்து கவலை தெரிவித்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக செயல்பட ரூ. 16.8 கோடிபணம் பெற்றதாக ஹிண்டன்பெர்க் 2.0வில் சிக்கிய செபி தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு