சென்னை : திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு புதுச்சேரி  முதுநிலை பார்வையாளர்  ‘முகுல்வாஸ்னிக் இன்று தமிழ்நாடு வருகை தருகிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் தேவை என்பது குறித்து  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உடன் ஆலோசனை நடத்திவிட்டு முதல்வர் ஸ்டாலினை சந்திப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரளவுக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது குறித்து திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த   தேர்தலில், கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை மேலும்  3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பது காங்கிரசாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், காங். மாநில மேற்பார்வையாளர் முகுல் வாஸ்னிக் இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். இவரது தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதுடன், முகுல்வாஸ்னிக் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் முதுநிலை பார்வையாளர்களாக முகுல் வாஸ்னிக், உத்தம்குமார் ரெட்டி, குவாசி முகமது நிஜாமுதீன் ஆகியோரை  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நியமனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]