சென்னை: அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு, பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை குறித்தும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில், தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், அதிமுகவில் இணைந்துள்ள பாஜக, மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு இன்று காலை பாஜக மாநில தலைவர் நயியானர் சென்று ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. – பா.ஜ.க. தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அதிமுக – பாஜக – பாமக கூட்டணி இறுதியானதை தொடர்ந்து, டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இரவு நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்த்து தற்போது நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார். அ.தி.மு.க. உடனான கூட்டணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை காரணம் காட்டி அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்ற தேர்தலில், பாஜக தரப்பில் 56 தொகுதிகளும், அமைச்சரவையில் பங்கீடும் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 30 தொகுதிகள் வரை ஒதுக்க இபிஎஸ் ஒப்புக் கொண்டதாகவும், அதிமுக 170 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி சென்னை வர உள்ள நிலையில், அதுகுறித்தும் ஆலோசனை நடத்தியதாகவும், அதற்குள் தொகுதி பங்கீடுகளை முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, டெல்லிக்கு நேற்று (டிசம்பர் 8) பயணம் மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது விரைவில் அறிவிக்கப்படும். பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து ஆலோசிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
மேலும், அமைச்சரவையில் பங்கு கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்கவில்லை. முன்னதாக, பாமகவுக்கு 17 முதல் 20 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்க அதிமுக ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]