குஜராத் மாநிலம் அகமதாபாத் முதல் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை வைக்கப்பட்டுள்ள கெவாடியா வரையிலான கடல் விமான சேவை நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2020ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைத்த இந்த கடல் விமான சேவை 2021ம் ஆண்டு ஏப்ரல் 10 ம் தேதி வரை மட்டுமே இயக்கப்பட்டது.
அதன் பின் நிறுத்தப்பட்ட இந்த சேவை குறித்து சட்டசபையில் பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போதும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிவந்தது.
பாஜக-வைச் சேர்ந்த சபர்மதி சட்டமன்ற உறுப்பினர் ஹர்ஷத் படேல் கடந்த வாரம் சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிர்வாகம் கடல் விமானத்தை மீண்டும் ஏவுவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடல் விமான இயக்க செலவு காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியாவின் கேள்விக்கு பதிலளித்த குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
ரூ 13,15,06,737 செலவில் 2020ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டம் நாட்டின் முன்னோடி திட்டம் என்றும் இதனால் குஜராத் மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சி அடையும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் இயக்கம் மற்றும் பராமரிப்பை கடினமாக்கியதால் சேவை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.