எடின்பர்க், ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்து எடின்பர்கை சேர்ந்த ஒரு பெண் தெர்மல் காமிரா என்னும் உஷ்ண மானி புகைப்பட கருவி மூலம் தனக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதை கண்டறிந்துள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எடின்பர்க் நகரைச் சேர்ந்த பெண் பால் கில். இவர் ஒரு அருங்காட்சியகத்துக்கு சென்றிருந்தார். அங்கு தெர்மல் காமெரா எனப்படும் உஷ்ணமானி புகைப்பட கருவி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அங்கு சென்று படங்கள் எடுத்துள்ளார். சுருக்கமாக டிக் என அழைக்கப்படும் இந்த புகைப்பட கருவி உஷ்ணத்தின் மூலம் உண்டாகும் பிம்பத்தை படமாக்கும் கருவி ஆகும்.
இவ்வாறு எடுக்கப்பட்ட படத்தின் மூலம் பால் கில் தனது பார்பகத்தில் ஒரு பட்டை போல ஏதோ இருப்பதைக் கண்டு அது குறித்து இணையத்தில் பார்வை இட்டுள்ளார். இவ்வாறு இருப்பது மார்பகப் புற்று நோயாக இருக்கக் கூடும் என தெரிந்துக் கொண்ட அவர் உடனடியாக இந்த படத்தை மருத்துவரிடம் காட்டி உள்ளார். பரிசோதனையில் அவருக்கு ஆரம்ப கால மார்பக புற்று நோய் உள்ளது கண்டறியபட்டது.
தற்போது சிகிச்சை பெற்று வரும் கில், “நான் டிக் அமைக்கப்பட்டிருந்த அந்த அருங்காட்சியகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு செல்லவில்லை எனில் எனக்கு புற்று நோய் தொடங்கி உள்ளது தெரியாமலே போயிருக்கும். அந்த காமிராவின் பணி அது இல்லை என்றாலும் எனது வாழ்க்கையை அது மாற்றி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் குழுவின் அறிக்கையின்படி தெர்மல் காமிராக்கள் மூலம் உடல் வெப்பம் மற்றும் இரத்த ஓட்டம் குறித்து அறிய முடியுமே தவிர அது புற்று நோயை கண்டுபிடிக்கும் கருவி அல்ல எனவும் இந்தக் கருவி பல முறை தவறான தகவல்களை அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் ஒரு சில மருத்துவமனைகளில் இந்த தெர்மல் காமிரா பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் குழு அறிவுறுத்தி உள்ளது.