சென்னை: சுட்டெரிக்கும் வாயில், மற்றும் வெப்ப அலை காரணமாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். அதுபோல புதுச்சேரியிலும் ஜுன் 6ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில், மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கி உள்ளதுடன், அனல்காற்றும் வீசி வருவதால், புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூன் 12ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என வேண்டுகோள் வரத்தொடங்கி உள்ளன.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், , தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ஆம் தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும்.
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் கத்திரி வெயிலுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக அளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்தனர். கோடை மழையின் காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் 108 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறப்பது சரியான முடிவு இல்லை.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் வரும் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜுன் 21-ஆம் தேதி தான் திறக்கப்பட உள்ளன. அவ்வாறு இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறப்பது நியாயமற்றது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறப்பை அரசு தீர்மானிக்க வேண்டும்.
கடந்த 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதும் தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசியதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதையேற்று பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 7-ஆம் தேதிக்கும், பின்னர் ஜூன் 14-ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மிகக் கடுமையான வெப்பம் வாட்டும் நிலையில் ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பது எந்த வகையில் நியாயம்?
கோடை வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்களும், தொழிலாளர்களும் பகலில் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல ஜிகேவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு மாநிலத்தில் நிலவும் கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து பள்ளி மாணவச் செல்வங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தற்போதைய கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது.வெயிலால் சில நேரம் வெப்பமும், சில நேரம் கடும் வெப்பமும் பொது மக்களையும், கால்நடைகளையும் பாதிக்கிறது.
எனவே வெயில் காலமான இப்பொழுது மாநிலத்தின் பலப்பகுதிகளில் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். கடுமையான வெப்பத்தால் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் அவர்களது பணிகளில் சரிவர ஈடுபட முடியவில்லை. அது மட்டுமல்ல குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில் தடை ஏற்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அதிக வெப்ப நிலையால் மாணவர்கள், மாணவிகள், பெண்கள், முதியோர் மயங்கி விழுந்ததும், சில இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் வருத்தத்துக்குரியது.
குறிப்பாக டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலப்பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய சூழலில் வெளி மாநிலங்களில் வெப்ப நிலை சுமார் 50 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு பள்ளிச்செல்லும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் கவனத்தில் கொண்டு ஜூன் 6 ல் பள்ளிகளில் வகுப்புகளை தொடங்குவதற்கு பதிலாக ஒரு வார காலம் தள்ளி வகுப்புகளை தொடங்க ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்என்று குறிப்பிட்டுள்ளார்.