பீஜிங்

சீனாவில் மரபணு மாற்ற ஆய்வு மூலமாக இரட்டைக் குழந்தைகளை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்குச் சீன நீதிமன்றம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.

உலகெங்கும் எய்ட்ஸ் நோய் குறித்த அச்சுறுத்தல் நிலவி வருகிறது.  இந்த எய்ட்ஸ் நோய்க்கான மருந்து இதுவரை கண்டு பிடிக்கவில்லை.   அதே நேரத்தில் இந்த நோய் தாக்காமல் தடுக்க எவ்வித தடுப்பு மருந்தும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் இந்த நோய் பரவுவதைத் தடுக்க தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்

சீனாவில் மரபணு மாற்றத்தின் மூலம் இரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. மரபணு மாற்றம் செய்து பிறந்த இந்த குழந்தைகள் எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச் ஐ வி கிருமியை எதிர்க்கும் சக்தியுடன் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.   இந்த மரபணு மாற்ற ஆராய்ச்சியில் ஹீ ஜினாய்குய், சிஹாங் ரென்லி மற்றும் சின் ஜின்சோ ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விஞ்ஞானிகள் முறையாக மருத்துவம் பயிலாதவர்கள் எனவும் சட்டவிரோதமாக இந்த ஆராய்ச்சியை நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த சீன நீதிமன்றம், “இந்த மூன்று ஆராய்ச்சியாளர்களும் முறையான மருத்துவ படிப்பைப் படிக்காமல் புகழ் மற்றும் லாப நோக்கத்தில் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர்.   சீனாவின் ஆராய்ச்சி விதிகளை இவர்கள் மீறி உள்ளனர்.  அத்துடன் அறிவியல், மருத்துவம் குறித்த எந்த நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை.

இவ்வாறு விதி முறைகளை மீறி ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 4.3 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்படுகிறது.   அவருடன் ஆய்வில் ஈடுபட்ட சிஹாங்க் ரென்லிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் சின் ஜின்சோவுக்கு 18 மாத சிறத் தண்டனையும் அளிக்கப்படுகிறது” எனத் தீர்ப்பு அளித்துள்ளது.