சென்னை:  தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில்,  தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு எப்போது? என்பது குறித்தும், பள்ளிகள் மீண்டும் திறப்பு குறித்தும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார்.

 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 4 முதல் துணைத்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று 10-ம் வகுப்பு  மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் சிவகங்கை மாவட்ட முதலிடம் பிடித்துள்ளது. 10-ம் வகுப்பில் 8 பேர் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் 346 பேரும், கணிதத்தில் 1996 பேரும், அறிவியலில் 10,838 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 10,256 பேரும் 100 மார்க் எடுத்து 10சாதனை படைத்துள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.  11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், விடைத்தாள் நகல், துணைத்தேர்வுகளுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம் போன்ற விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சிக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் : 19.05.2025 முதல் அனைத்து பள்ளிகளும் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

மேலும், தேர்வு  விடைத்தாள் நகல் பெற  20.05.2025 – 24.05.2025 வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டார்.

தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத்தேர்வுகள்  04.07.2025 முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

துணைதேர்வுகளை எழுதும்   பள்ளி மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகளில் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் அரசு சேவை இணையத்தளம் வாயிலாக 22.05.2025. 06.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 2ந்தேதி  திறக்கப்படும் என்றவர், கோடை வெயில் கொளுத்தும் நிலையில், அதுகுறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.

ஏற்கனவே பிளஸ் 2  (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் மறுதேர்வுக்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? எந்த தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப காலம்: துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாணவிகள் மே 14, 2025 முதல் மே 31, 2025 வரை மட்டுமே விண்ணப்பம் செய்துகொள்ள முடியும். எனவே, இந்த காலக்கெடுவிற்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாக துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகள் மாணவர்களின் விண்ணப்பங்களை சேகரித்து, அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கும்.

தனித்தேர்வர்கள்:

  • தனித்தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் சேவை மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
    இதற்காக அரசு தேர்வுகள் இயக்ககம் மாவட்ட வாரியாக சேவை மையங்களை அமைத்துள்ளது.

துணைத் தேர்வு நடைபெறும் தேதி:

  • துணைத் தேர்வுகள் ஜூன் 25, 2025 முதல் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தேர்வு அட்டவணை மற்றும் பிற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • +2 பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் (மதிப்பெண் பட்டியலை மே 12, 2025 முதல் அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்). பள்ளி அடையாள அட்டை அல்லது பிற அடையாளச் சான்று. தேர்வு கட்டணம் செலுத்தியதற்கான ரசீது (கட்டண விவரங்கள் பள்ளி மூலம் தெரிவிக்கப்படும்).

தனித்தேர்வர்கள்:

  • முந்தைய தேர்வு மதிப்பெண் பட்டியல் அல்லது தேர்வு எண் (Hall Ticket Number). அரசு தேர்வுகள் இயக்ககத்தால் குறிப்பிடப்பட்ட பிற ஆவணங்கள் (அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்) தனித்தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in இல் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, சேவை மையங்களில் சமர்ப்பிக்கலாம்.