சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ந்தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது தொடர்பாக முதல்வர் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட முக்கிய ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் உள்ள நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. தினசரி 30ஆயிரம் பேர் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதையடுத்து, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழல், தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தொற்று பரவல் அதிகரித்துள்ள கேரள மாநிலத்தில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், அறிவித்தபடி செப்டம்பர் 1ந்தேதி பள்ளி கல்லூரிகளை தடுக்கலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, சுகாதாரத்துறை தரப்பில், தமிழக கேரளா எல்லையோர மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை மட்டும் தொடரலாம், மற்ற பகுதிகளில் நேரடி வகுப்பு தொடங்கலாம் என பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இன்று இரவு அல்லது நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் முன்னுரிமை அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.