ஸ்ரீநகர்
காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.

கடந்த 22-ந்தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.