சென்னை:
சென்னையில் இன்று நடைபெற்ற  கல்வி கடன் ரத்து கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி வேண்டும் என வாசன் கோரிக்கை விடுத்தார்.
மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரியும், தனியார்கள் மூலம் கட்டாய வசூல் செய்வதை நிறுத்தக் கோரியும் த.மா.கா. மாணவர் அணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
gk vasan
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தமாகா மாணவரணி தலைவர் சுனில்ராஜா  தலைமையில் வாசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
கல்வி வளர்ச்சி தான் தேசத்தின் அடையாளம் நாட்டின் வாழ்வும் வளமும் மாணவர்கள் கையில் உள்ளது. மாணவர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். பள்ளி முதல் கல்லூரிவரை இலவச கல்வி வழங்க வேண்டும்.
தனியார் கல்லூரிகளில் நடைபெறும் கட்டண கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது மத்திய, மாநில அரசுகள் எற்றுக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பெற்ற கடனை வசூல் செய்ய தனியார் ஏஜன்சிகளை அனுமதித்திருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
கல்விக் கடனை வராக் கடனாக அறிவித்து மாணவர்களின் பெயரை சிபில் பட்டியலில் சேர்ப்பது கண்டனத்துக்குரியது.
தமிழகம் கல்வி விழிப்புணர்வு பெற்ற மாநிலம். இங்கு 9 லட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 380 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடன் வசூலிப்பதற்காக தனியார்களை நியமித்துள்ளது. இதை உடனே கைவிட வேண்டும். அதேபோல் கடன் செலுத்த தவறிய மாணவர்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைக்கு விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதும் கடும் கண்டனத்துக்குரியது.
பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் தேர்தல் நேரத்தில் கல்விக் கடன் ரத்து உள்பட பல்வேறு வாக்குறுதிகளை மாணவர்களுக்கு வழங்கியது. 2 அரசுகளும் அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டன.
த.மா.கா மாணவர்கள் நலன் காக்கும் இயக்கமாக தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு அவர் பேசினார்.