சரக்கு விற்பனையில் பள்ளி ஆசிரியர்கள்..
ஆந்திர மாநிலத்தில் மது விற்பனையில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ஆந்திராவில் திங்கள்கிழமை முதல் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
என்.டி.ஆர். சினிமாவை பார்ப்பதற்கு தியேட்டர்களில் திரள்வது போல்,ஒவ்வொரு கடையிலும் அப்படி ஒரு கூட்டம்.
இதனால் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
விசாகப்பட்டினத்தில் உள்ள மதுக்கடைகளில் , குடிமகன்களுக்கு ’டோக்கன்’ கொடுக்கும் பணியில் அந்த பகுதி பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விடுமுறை என்றாலும் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களை. மாவட்ட கல்வி அலுவலர் போனில் அழைத்து, உள்ளூர் காவல்நிலையம் சென்று அவர்கள் வழங்கும் பணியைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
காவல் நிலையங்களுக்கு சென்றபோது தான், தங்களுக்கு மதுபான கடைகளில் ‘’வேலை’’ ஒதுக்கி இருப்பது தெரியவந்தது.
வேறு வழியில்லாமல் ஆசிரியர்களும் மதுபான கடைகளில் காவல்துறைக்குத் துணையாக-
கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது, குடிமகன்களுக்கு டோக்கன் கொடுப்பது போன்ற பணிகளைச் செய்துள்ளனர்.
‘’சேவை செய்வது தான் ஆசிரியர்களின் பணி. எந்த வேலை கொடுத்தாலும் செய்வோம். ஆனால் மதுக்கடையில் வேலை பார்க்க வைத்து விட்டார்களே? குற்ற உணர்வு எங்களை வாட்டி வதைக்கிறது’’ என்று குமுறுகிறார்கள், ஆசிரியர்கள்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
– ஏழுமலை வெங்கடேசன்