அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியைகள் ஜீன்ஸ், டீசர்ட் போன்ற நவீன உடைகளை அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் கஞ்சன்பூர் என்ற இடத்தில் இளம் ஆசிரியைகள் சிலர் ஜீன்ஸ், டீசர்ட் போன்ற நவீன ஆடைகளை அணிந்து வந்தனர். “இப்படிப்பட்ட ஆடைகளில் ஆசிரியைகள் பள்ளிக்கு வருவதால் பதின் பருவத்தில் உள்ள மேல்நிலை வகுப்பு மாணவர்கள் மனம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது” என்று சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஆசிரியைகள் நவீன ஆடை அணிய பள்ளி நிர்வாகம் தடை விதித்தது. கஞ்சன்பூர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சக்மா இது பற்றி கூறுகையில், “ஆசிரியைகளின் நவீன ஆடை விவகாரம் குறித்து மூத்த ஆசிரியர், ஆசிரியைகளுடன் கலந்து விவாதித்தோம்.
இதையடுத்து ஆசிரியைகள் தங்களது பள்ளி நேரத்தின் போது நவீன ஆடைகளை அணிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். ஆதே நேரம் பாரம்பரிய உடையான சல்வார் கமீஸ் போன்றவற்றை ஆசிரியைகள் அணிந்து வரலாம் என்றும் தெரிவித்துள்ளோம்.
இது வெறும் வாய்மொழி உத்தரவு தான். மற்றபடி அவர்களது ஆடை அணியும் முறையை கட்டுப்படுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது” என்றார். அதே நேரத்தில் கஞ்சன்பூரில் உள்ள மற்ற பள்ளிகளிலும் இதே போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து மூத்த அரசு ஆசிரியை ஆஷீத் தத்தா தெரிவித்ததாவது: “ஆசிரியராக இருந்தாலும் சரி, ஊழியராக இருந்தாலும் பணி நேரத்தில் ஒருவர் அணியும் ஆடையானது அவரது ஆளுமையை பிரதிபலிப்பதாக, கண்ணியத்தை காட்டுவதாக இருப்பது அவசியம்.
அதே நேரத்தில் தனிநபர்கள் ஆடை அணிவதில் எந்த வித கட்டுப்பாடுகளும் விதிப்பதை ஏற்க முடியாது” மகளிர் அமைப்புகள் சில, ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிரான கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போது திரிபுராவில் இந்த விசயம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.