புனே

வறுமையில் வாடும் பள்ளி கடைநிலை ஊழியருக்கு பள்ளி ஆசிரியர்கள் நிதி திரட்டி தங்கள் செலவில் திருமணத்தை நடத்தி உள்ளனர்.

புனே நகரில் உள்ள கட்கி பகுதியில் எஸ் வி எஸ் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கடை நிலை ஊழியராக அங்குஷ் போஸ்லே என்னும் இளைஞர் கடந்த இரண்டரை வருடங்களாக பணி புரிந்து வருகிறார். இவர் அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்துக் கொள்வதால் இவர் மீது பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் அன்பு செலுத்தி வந்தனர்.

தனது மூன்று சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்த பிறகு சிறிதும் பணம் இல்லாததால் தன்னுடைய திருமணம் குறித்து சிந்திக்கவும் முடியாத நிலையில் போஸ்லே இருந்தார். இந்நிலையில் அவருடைய தாயாரும் இறந்து விட்டதால் தனிமையில் வாடி உள்ளார். ஏற்கனவே தந்தையையும் இழந்திருந்த போஸ்லேவுக்கு திருமணம் செய்து வைக்க யாரும் இல்லை.

இந்நிலையில் அவருடைய நிலை குறித்து அப்பள்ளியின் பிரின்சிபல் கவுரி சந்தானம் கேட்டு அறிந்தார். அவருடய திருமணத்துக்கு பள்ளி ஊழியர்கள் ஆதரவு அளிப்பார்கள் என அவர் உறுதி அளித்தார். அதை ஒட்டி பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து அவருடைய திருமணத்தை ஏற்பாடு செய்தனர். அந்த பள்ளி வளாகம் அலங்கரிக்கப்பட்டு ஆசிரியர்கள் நிதி உதவியுடன் பள்ளியிலேயே திருமணம் நடந்தது.

இந்த திருமணத்துக்கு 300 பேர் அழைக்கப்பட்டு விருந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்துக்கு முன்னாள் பிரின்சிபல், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். ஆசிரியர்களின் கருணைக்கு பள்ளி தாளாளர் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.