புதுக்கோட்டை: மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள நரியன்புதுப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 2018ம் ஆண்டு அப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அன்பரசன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரனிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஆசிரியர் அன்பரசன், தலைமை ஆசிரியர் ஞானசேகரன் உள்ளிட்ட இருவர் மீதும் போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கானது புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்யா இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 45,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.