சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டகல்வி நிறுவனங்கள் 7 மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த அரசின் அறிவிப்புக்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோரின் கருத்துகளை கேட்கும்படி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (9ந்தேதி) அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரை அழைத்து கருத்து கேட்கப்பட்டது.
இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளை திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்களை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.