சென்னை: தமிழ்நாட்டில், 10 மற்றும் 12வது வகுப்பு பொதுத்தேர்வை எழுதாதவர்கள்,  தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் உடனே துணைத்தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி,  பொதுத்தேர்வை தவற விட்ட 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு விரைவில் துணைத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது. இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.  அதற்கான தேர்வு முடிவுகள் வரும் 6ந்தேதி முதல் வெளியாக உள்ளது. இதற்கான அனுமதி தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டு உள்ளது.

நடப்பாண்ளடு பொதுத்தேர்வை சுமார் 40ஆயிரம் மாணவ மாணவிகள் எழுத வில்லை என்று கூறப்படுகிறது. முக்கிய பாடங்களை எதிர்கொள்ள பயந்து ஏராளமான  மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை. அவ்வாறு தேர்வை எழுதாதவர்கள் மீண்டும் தேர்வை எழுத வைக்கும் முடிவில் பள்ளிக்கல்வித்துறை செயலாற்றி வருகிறது.  தேர்வு எழுதாத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் துணைத் தேர்வின்போது தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று  பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மே 6ந்தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில், தொடர்ந்து 11ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட உள்ளது. இந்த  பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானபிறகு அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களையும், தேர்வு எழுதாத மாணவர்களையும் இணைத்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி,  பின்னர் அனைவரையும் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க  பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றால், நடப்பு கல்வியண்டில் கல்லூரியில் உயர்படிப்புக்கு சேர முடியும் என்பதால், தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே துணைத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.