சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை இன்று திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்து கொரோனா பெருந்தொற்று பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், தங்கமகன் மாரியப்பனுக்கு அரசு வேலை வழங்கும் ஆணையை வழங்கினார். அதைத் தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ.169.11 கோடி மதிப்பீட்டிலான பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, 3 கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருதுகளை வழங்கினார்,
நபார்டு திட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மாவட்ட கனிமவள நிதி மற்றும் ஆசிரியர் நலத்திட்ட நிதி ஆகியவற்றின் மூலமாக பள்ளிகளுக்கு 169 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 அரசு பள்ளி கட்டடங்கள் நூலக கட்டிடம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா பெருந்தொற்று பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையினை முதலமைச்சர் வழங்கினார்.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பணியில் ஈடுபட்ட 1,05,168 பணியாளர்களுக்கு 196.91 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கும் அடையாளமாக 13 பணியாளர்களுக்கு ஊக்க தொகைக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.