புதுச்சேரி:
புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 1-ல் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக இரு ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதையடுத்து டிசம்பரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர் ஒமைக்ரான் மற்றும் கரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “புதுச்சேரியில் கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் முடிக்கப்படாமல் இருப்பதால் வாரத்தில் 6 நாட்களும் முழு நேரமும் பள்ளிகள் செயல்படும். பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு 9-ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. அப்படி புகார் வந்தால், அந்தப் பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.