புதுடெல்லி:

அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.


மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் 65-வது பொதுக்குழு மற்றும் 112-வது ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்ற முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது:

50% பெண்கள் உட்பட 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு மெட்ரிக் படிப்புக்கு முன்பும், பின்பும் மற்றும் மெரிட் அடிப்படையிலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

வகுப்புவாத நோயை படிப்படியாக அழித்து நல்ல சூழலை மோடி அரசு உருவாக்கி வருகிறது.
அதிகாரமிக்க அரசு, நீதி மற்றும் நேர்மையான அரசு என மத்திய அரசு நிரூபித்துள்ளது.

நம்பிக்கையுடனான வளர்ச்சியை மோடி அரசு திட்டமிட்டுள்ளது.  பள்ளியை பாதியில் நிறுத்தும் சிறுபான்மையின மாணவிகள், மீண்டும் கல்வியை தொடரவும், பயிற்சி வகுப்புகள் மூலம் வேலை வாய்ப்பை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களிலிருந்து இத்தகைய பயிற்சிகள் தரப்படும். நாடு முழுவதும் உள்ள மதராசா ஆசிரியர்களுக்கு பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலம் இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் கணினி பயிற்சி அளிக்கப்படும்.

மதராசா திட்டம் அடுத்த மாதத்திலிருந்து தொடங்கப்படும்.  சமூக பொருளாதாரம் மற்றும் சிறுபான்மையினத்தவருக்கான கல்வி அதிகாரத்தை உருவாக்க, குறிப்பாக மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

ரூ.10 லட்சம் பேகம் ஹஜ்ரத் மஹால் பெண்கள் கல்வி உதவித் தொகையும் இதில் அடங்கும். பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

பள்ளிகள், கல்லூரிகள், ஐடிஐ, பாலிடெக்னிக்குகள், பெண்கள் விடுதிகள், குருகுல முறையிலான பள்ளிகள் மற்றும் பொது சேவை மையங்கள் போர்க்கால அடிப்படையில் கட்டித் தரப்படும்.
பிரதமரின் ஜன் விகாஸ் திட்டத்தின் கீழ் இந்த கட்டிடங்கள் கட்டப்படும்.

சிறுபான்மையின பெண் குழந்தைகளை சமூக பொருளாதார காரணத்துக்காக பள்ளிக்கு அனுப்பாத இடங்களில், கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மத்திய மற்றும் மாநில நிர்வாக பணிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்.

வங்கி பணிகள், ரயில்வே மற்றும் ஏனைய போட்டித் தேர்வுகளுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினத்தவரான முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயின், புத்த மதத்தினர் மற்றும் பார்ஸிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.