சென்னை
விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் தம்மை கேட்காமலே காட்சிகளை சேர்த்துள்ளதாக இயக்குநர் விஜய் மில்டன் கூறியுள்ளார்.
இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கிய விஜய் ஆண்டனி நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை அடுத்து விஜய் ஆண்டனி ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி உள்ளது. சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்த்துக்கு U/A சான்றிதழை வழங்கியது. நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிம் சுமாரான விமர்சங்களையே வெற்று வருகிறது.
இதன் பத்திரிகையாளர் காட்சியைப் பார்த்த இயக்குநர் விஜய் மில்டன்,
“மழை பிடிக்காத மனிதனில் நாயகன் யார், எங்கிருந்து வந்திருக்கிறார் என்கிற கேள்விகளை வைத்தே இப்படத்தை எடுத்தேன். கேள்விகளாலே இக்கதையை உருவாக்கியிருந்தேன். இப்போது, படத்தைப் பார்க்கும்போது நாயகன் யார் என்கிற ஒரு நிமிட காட்சியை படத்தின் ஆரம்பத்தில் யாரோ சேர்த்திருக்கிறார்கள்.
இப்படி காட்சியை சேர்த்தால் பார்ப்பவர்களுக்கு என்ன சுவாரஸ்யம் இருக்கும்? தணிக்கைக்குச் சென்ற பிறகு வெளியீட்டிற்கு முன்பு இக்காட்சியை இணைத்திருக்கிறார்கள். இயக்குநரைக் கேட்காமல் இப்படிச் செய்ததற்காக என்ன சொல்வதென்றே தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள் தயவு செய்து, அந்த முதல் ஒரு நிமிடத்தை மறந்துவிட்டு பாருங்கள்”
என்று தெரிவித்துள்ளார்.