ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்கேனியா நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்துகளை ‘அன்பளிப்பாக’ பெற்ற விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

இந்நிலையில், பெங்களூருவில் அமைந்திருக்கும் ஸ்கேனியா நிறுவனத்தின் இந்திய அலுவலகத்திற்கு நிதின் கட்கரியின் மகன்களான நிகில் மற்றும் சாரங் கட்கரி ஆகியோர் அனுப்பிய ஈ-மெயில் உள்ளிட்ட ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரவாதம் இல்லாத கடனாகவும், சொற்ப வாடகைக்கு பேருந்தை இந்தியாவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவருக்கு வழங்கியதாக எழுதியிருந்த குறிப்பை ஆய்வு செய்த அந்நிறுவனத்தின் ஸ்வீடன் அதிகாரிகள், இதுகுறித்து குற்ற நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஸ்கேனியா பேருந்துகளின் இந்திய விற்பனையை செயல்படுத்திவரும் ட்ரான்ஸ்-ப்ரோ என்ற நிறுவனத்திடமிருந்து 1.8 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பேருந்தை மாதம் ரூ. 20,000 சொற்ப வாடகைக்கு சுதர்ஷன் ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த பேருந்தை கட்கரியின் மகன்களை இயக்குனராக கொண்ட மனஸ் நிறுவனத்திடம் இருந்து உத்தரவாதம் இல்லாத கடனாக வாங்கிய 25 லட்ச ரூபாய்க்கு ஈடாக அந்த நிறுவனம் வழங்கியதாக தெரிகிறது.

அந்தவகையில், சொகுசு பேருந்தை அமைச்சருக்கு அன்பளிப்பாக வழங்கியதில் ஸ்கேனியா நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது பரபப்பாக பேசப்படும் நிலையில், இது குறித்து ஸ்வீடன் நிறுவனம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.