மும்பை

காராஷ்டிரா முதல்வர் அலுவலகத்தில் உள்ளோர் ஒரு நாளைக்கு 18500 கோப்பைகள் தேநீர் பருகியதாக வெளி வந்த தகவலினால் அதில் ஊழல் உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில முதல்வரான தேவேந்திர ஃபட்னாவிஸ் அலுவலகத்தில் தேநீர் வழங்க ஆகும் செலவுகள் குறித்து ஒரு கேள்வி எழுப்பப் பட்டது.   தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுப்பப் பட்ட இந்த கேள்விக்கு அலுவலகம் அளித்த பதில் அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.   இந்த தகவலை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் அறிக்கை அளித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “முதல்வர் அலுவலக தேநீர் செலவுகள் கடந்த மூன்று வருடங்களில் 577% உயர்ந்துள்ளது.   கடந்த 2015-16ஆம் வருடம் ரூ.58 லட்சமாக இருந்த ஒரு ஆண்டுக்கான தேநீர் செலவு 2017-18 ஆம் வருடத்தில் ரூ.3.4 கோடியாக அதிகரித்துள்ளது.   அதாவது 577 % அதிகரித்த இந்த செலவினால் ஒரு நளைக்கு 18591 கோப்பைகள் தேநீர் பருகப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனக்கு தெரிந்து கிரீன் டீ, எல்லோ டீ என இரு வகை உண்டு.   தேவேந்திர ஃபட்னாவிஸ் ஏதாவது தங்க தேநீர் குடிக்கிறாரா என நான் நந்தேகப் படுகிறேன்.   இவ்வளவு செலவு ஆகிறதென்றால் நிச்சயம் அந்த தேநீர் தங்கத்தினால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த தேநீர் செலவில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக நான் சந்தேகப்படுகிறேன்.   ஒரு பக்கம் மகாராஷ்டிர விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.   அதே நேரத்தில் முதல்வர் அலுவலக தேநீர் செலவு மட்டும் ரூ.3.4 கோடியாக உள்ளது.    பிரதமர் மோடி தன்னை ஒரு டீக்கடைக்காரர் என எளிமையாக சொல்லிக் கொள்கிறார்.   ஆனால் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேநீருக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்.

இந்த தேநீர் விவகாரத்தில் நிச்சயம் முறைகேடு ஏற்பட்டுள்ளது.   தனது அலுவலகத்தில் நடக்கும் தேநீர் ஊழலைக் கூட முதல்வர் கண்டு கொள்ளாமல் இருப்பது தவறானது.   உடனடியாக இதை விசாரித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”  என சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.