வெளிநாடுகளில் வாடகை வளாகத்தில் உள்ள இந்திய தூதரகங்களை சொந்த இடங்களுக்கு மாற்ற நிலம் வாங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த முறைகேட்டில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள சவுத் பிளாக் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
வாடகை வளாகங்களில் உள்ள தூதரகங்கள் நிலம் வாங்கவும் கட்டிடம் கட்டவும் இந்திய வெளியுறவுத் துறை (MEA) அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து தூதரகங்களுக்காக நிலம் வாங்கப்பட்டது.
இதில் சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு சி.ஏ.ஜி. கொண்டு சென்றுள்ளது.
இதனையடுத்து புதிய தூதரகங்கள் அமைக்க நிலம் வாங்கிய பரிவர்த்தனைகளின் பதிவுகளை சரிபார்க்க MEA இன் இரண்டு வெவ்வேறு குழுக்கள் இந்த நாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய வெளியுறவுத் துறை வாங்கிய சொத்துக்கள் குறித்து ஆய்வு நடத்த வாய்ப்புள்ளது. அமைச்சகத்தின் அறிக்கை விரைவில் உரிய அதிகாரிகளிடம் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.