நிா்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவா் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பா் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ‘நிா்பயா’வை, 6 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கடுமையாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதே மாதம் 29ம் தேதி சிகிச்சை பலனின்றி நிர்பயா உயிரிழந்தாா். இதில் குற்றவாளிகளாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். சீா்திருத்த இல்லத்தில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த அவா், பின்னா் விடுவிக்கப்பட்டாா். மற்ற ஐவருக்கும் விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துக்கொள்ள, இத்தீர்ப்பை எதிர்த்து நால்வர் தரப்பில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பே உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய மூன்று குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அம்மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய, கருணை மனுக்களாக குடியரசுத் தலைவர் மற்றும் டில்லி ஆளுநருக்கு கடிதம் ஒன்றை மூவரும் அனுப்பினர். அம்மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இம்மாதம் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் நான்கு குற்றவாளிகள் ஒருவரான அக்ஷய் குமார் சிங், உச்சநீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “மரண தண்டனையால் குற்றவாளிகளை அழித்துவிட முடியுமே தவிர குற்றங்களை அழிக்க முடியாது. குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இம்மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே, நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று விசாரிக்க உள்ளது.