டில்லி
இரு தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மத்திய அரசு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர் பிர்டி என்பவரின் படகில் 11 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் கேரளாவின் கொல்லம் மீன்பிடி துறைமுகம் அருகே இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட அரபிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அங்கு என்ரிகா லாக்சி என்னும் இத்தாலி நாட்டு எண்ணெய் சரக்கு கப்பல் ஒன்று அக்கே வந்தது. அதில் இருந்த மாலுமிகள் மீன்பிடி படகை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் அஜீஸ் பிங்க், ஜெலஸ்டின் ஆகிய இரு மீனவர்கள் உயிர் இழந்தனர் மேலும் 9 மீனவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கொல்லம் மாவட்டம் நீண்டகரை கடலோர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இத்தாலி மாலுமிகள் மசிமிலியானோ மற்றும் சல்வடோர் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரிக்க இந்திய அரசுக்கு உரிமை இல்லை என இத்தாலி தரப்பில் வாதிடப்பட்டது,
எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்தது. இந்த விவகாரம் இதன் பின்னர் சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இந்திய எல்லைக்குள் சென்று இந்திய மீனவர்களை இத்தாலி மாலுமிகள் சுட்டது தவறு எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இத்தாலி மாலுமிகளுக்குத் தண்டனை அளிக்கவில்லை. மாறாக இத்தாலி அரசு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
மத்திய அரசு இதையொட்டி உச்சநீதிமன்றத்தில், “நாங்கள் மரணமடைந்த மீனவர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இத்தாலி அரசு இரண்டு மாலுமிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெறும் என உறுதி அளித்துள்ளது. எனவே வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை நாளை அதாவது ஏப்ரல் 9 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.