சகாரா குழுமத் தலைவர் சுப்ரதராய் மீதான பணமோசடி தொடர்பான வழக்கில் பரோலில் தொடர்ந்து இருப்பதற்கு, 600 கோடி ரூபாய் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
சகாரா ரியல் எஸ்டேட் நிறுவனம், தனது முதலீட்டாளர்களிடம் பல்லாயிரம் கோடி ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில், கடந்த 2012-ம் ஆண்டு சகாரா குழுமம், 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு 15 சதவீத வட்டியுடன் திருப்பித்தரவேண்டும் என்று சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு அவர், இதனை செலுத்த தவறியதால், கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தன்னை பரோலில் விடுதலை செய்யக்கோரி சுப்ரதா ராய் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், 600 கோடி ரூபாயை அடுத்த மாதம் 6-ம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் பரோலில் வெளிவந்தார்.
தற்போது 600 கோடி ரூபாயை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்ககோரி, உச்சநீதிமன்றத்தில் சுப்ரதா ராய் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் திரு. தீபக் மிஸ்ரா, திரு. கோகாய், திரு. அர்ஜன் குமார் சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
சகாரா குழுமத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சுப்ரதா ராய்க்கு பலமுறை வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டதால், அடுத்த மாதம் 6-ம் தேதிக்குள் 600 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தீர்ப்பளித்தனர்.
.