டில்லி
கடந்த 2001 முதல் 2005 வரை வழங்கப்பட்ட தொலைதூரக் கல்வி மூலம் அளிக்கப்பட்ட பொறியியல் பட்டங்களை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக முடக்கி உள்ளது.
தொலைதூரக்கல்வி முறையில் பொறியியல் கல்வி பயிற்றுவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் பல்கலைக்கழகங்களுக்கு சமீபத்தில் தடை விதித்தது. ஆனால் ஏற்கனவே அனுமதி வாங்காமல் சில பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்வி மூலம் பொறியியல் பட்டங்கள் வழங்கி உள்ளன. அதில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்கள் குறித்து தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை அளித்துள்ளது.
”ராஜஸ்தானில் உள்ள ஜேஆர்என் ராஜஸ்தான் வித்யாபீட், இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வன்ச்ஸ்ட் ஸ்டடீஸ் இன் ராஜஸ்தான், மற்றும் அலகாபாத் அக்ரிகல்சுரல் இன்ஸ்டிட்யூட் ஆகிய பல்கலைக்கழகங்களில் பொறியியல் பட்டங்கள் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2001 முதல் 2005 வரை இது போல வழங்கப்பட்ட பட்டங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. 2005 ஆம் வருடத்துக்கு பின்பு அளிக்கப்பட்ட அத்தனை பொறியியல் பட்டங்களும் முழுமையாக முடக்கப்படுகின்றன.
2001 முதல் 2005 வரை பட்டம் பெற்றோர் தகுதித் தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் பட்டங்கள் உறுதி செய்யப்படும். தேர்ச்சி பெறாதவர்களின் பட்டங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். தகுதித் தேர்வு எழுத விரும்பாதவர்களுக்கும், 2005க்கு பிறகு வழங்கப்பட்ட பொறியியல் பட்டங்களை பெற்றவர்களுக்கும், அவர்கள் பட்டங்களை இந்தப் பல்கலைக் கழகங்கள் திரும்பப் பெற வேண்டும். அவர்களிடம் இருந்து பெற்ற கட்டணங்கள் அனைத்தையும் திருப்பித் தர வேண்டும். அத்துடன் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் செலுத்திய அனைத்துக் கட்டணங்களும் திருப்பித் தர வேண்டும்.
இந்தத் தகுதித் தேவை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வித் துறை மேற்பார்வையில் நடத்தப்படும். ஒரு பட்டதாரிக்கு இந்தத் தேர்வில் இருமுறை மட்டுமே பங்களிக்க முடியும். இரு முறையும் தோல்வி அடைந்தால் பட்டங்கள் ரத்து செய்யப்படும். இந்தத் தேர்வுக்கான அனைத்துச் செலவுகளையும் மேலே குறிப்பிட்ட மூன்று பல்கலைக்கழகங்களும் ஏற்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.