டில்லி:

நாட்டையே  பரபரப்புக்குள்ளாகி உள்ள உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியான  ரஞ்சன்கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் அமர்வு,  சிபிஐ, உளவுத்துறை தலைவர், டெல்லி போலீஸ் ஆணையர் ஆஜராக  அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேர்மையான மற்றும் யாருக்கும் பயமின்றி தீர்ப்புகளை வழங்கி வருபவர்.  உச்சநீதி மன்றத்தில் விரைவில் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், ரஞ்சன் கோகோய் மீது முன்னாள் உச்சநீதி மன்ற ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார்.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களைத் தெரிவித்தார். இந்தப் புகார்களை உச்ச நீதிமன்றத்தில் உள்ள  22 நீதிபதிகளுக்கும், அந்தப் பெண் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகார் தொடர்பாக ஏற்கனவே  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வில்  விசாரிக்கப்பட்டது. இதற்கிடையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் சிங் ஜெயின் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  பிரமாணப் பத்திரத்தில்,  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சிக்கவைக்கவும், அவரை பதவி விலக வைக்கவும் சதி நடக்கிறது என்றவர், ஏற்கனவே தன்னை ஒருவர் சந்தித்து பேசியதாகவும், அப்போது,  தலைமை நீதிபதிக்கு எதிராக போலியாக பாலியல் புகாரைப் பதிவு செய்ய உதவ வேண்டும் என்றும், அதற்காக ரூ.1.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறினார்.

இது மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பாலி நாரிமன், தீபக் குப்தா ஆகிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு  வந்தது.

விசாரணையை தொடர்ந்து,  நீதிபதி அருண் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில், சிபிஐ தலைவர், உளவுத்துறை தலைவர், டெல்லி போலீஸ் ஆணையர் ஆகியோர் எங்களை தனிப்பட்ட முறையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு சந்திக்க வேண்டும்.‘ இது விசாரணை அல்ல. இந்த அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் எந்த ஆதாரங்களையும் வெளியிட நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தவர், நாட்டின், தலைமை நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை, சுதந்திரம் தொடர்பானது என தெரிவித்துள்ளார்.