சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் வருமானவரித்துறை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்திடம் கைப்பற்றிய தொகைக்கு வரி வசூலிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராச்சாமியின் மகன் கதிர் ஆனந்த். இவர் வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது வீட்டில் கடந்த 2019 மார்ச் மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் வருமான வரி சோதனை நடந்தது.
மேலும் துரைமுருகனின் நண்பரான பூஞ்சோலை சீனிவாசன் சகோதரி வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது ரூ. 11.48 கோடி ரூபாய் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதையொட்டி கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதியப்பட்டது. மேலும் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட ரூ.11.48 கோடிக்கு வரி செலுத்த உத்தரவிடப்பட்டது.
இதையொட்டி திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த்திடம் இருந்து வருமானவரிச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ரூ. 11.48 கோடிக்கு வரி வசூலிக்கும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.