டில்லி:

தனி மனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையா என்பதை முடிவு செய்ய 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அமர்வு நாளை கூடி விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார், தனி மனித ரகசிய காப்பு உரிமைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

இன்று நடந்த விசாரணையில் போது தலைமை நீதிபதி கூறுகையில்,‘‘ அரசியலமைப்பு சட்டத்தின் படி தனி மனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையா? இல்லையா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

‘‘அடிப்படை உரிமை தொடர்பான விசாரணை 9 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வு தான் விசாரிக்க வேண்டும். ஆதார் தொடர்பான விசாரணையை 5 பேர் கொண்ட சிறிய அமர்வு விசாரி க்கலாம்’’ என்று மத்திய அரசு வக்கீல் வேணுகோபால் தெரிவித்தார்.

இதையடுத்து தனி மனித ரகசியம் காப்பது தொடர்பான அடிப்படை உரிமை விசாரணையை மேற்கொள்ள 9 நீதபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று உத்தரவிட்டது.

12 இலக்க எண் கொண்ட ஆதார் அரசின் நலத்திட்டங்கள், வரி நிர்வாகம், ஆன்லைன் நிதி பரிமாற்றம் போன்ற அனைத்துக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதில் தனி மனித ரகசியம் என்ற அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று வழக்கில் மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.