டெல்லி: கொரோனா நோயாளிகளின் வீட்டின் வெளியே உத்தரவின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்காக சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் விவரம் அடங்கிய நோட்டீசானது அவர்களின் வீட்டு வாயிலில் ஒட்டப்பட்டு வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு பரிந்துரைக்கவில்லை என்றாலும், நோயாளிகளுடன் மற்றவர்கள் தொடர்பு கொள்வதை தடுக்க  மாநில அரசுகள் தாங்களாகவே இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுத்துள்ளன என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கொரோனா நோயாளிகளின் வீட்டின் வெளியே உத்தரவின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று  உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றம் மேலும் தெரிவித்து உள்ளதாவது: நோயாளிகள் வீடுகளில் சுகாதாரத்துறை தரப்பில் கொரோனா பாதித்தவர்களின் அடையாளத்தை வெளியிடும் வகையில் நோட்டீஸ் ஒட்டுவது தேவையற்றது.

கொரோனா பேரிடர் மேலாண்மை சட்டத்திற்குட்பட்டு உயரதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டும் நோட்டீஸ் ஒட்டலாம்  என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.