டில்லி
அரசின் செயல்களை விமர்சிப்பது தேச விரோத குற்றத்தின் கீழ் வராது என காவல்துறைக்கு உச்ச நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேச விரோதக் குற்றம் செய்ததாக தற்போது பல வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, அணு உலை எதிர்ப்பாளரான உதயகுமார், காஷ்மீர் நிலை குறித்து கருத்தரங்கம் நடத்திய அம்நெஸ்டி இண்ட்ர்நேஷனல் இந்தியா என்னும் அமைப்பு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படும் கன்னட நடிகை ”குத்து” ரம்யா என்னும் திவ்யா ஸ்பந்தனா, ஆகியோர் மீதான வழக்குகள் ஆகும்.
இந்த வழக்குகளில் ஒன்று சமீபத்தில் ஒரு தீர்ப்பில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் உதய் லலித் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அதில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதாடும் போது, கேதார் நாத் தீர்ப்பு பற்றி குறிப்பிட்டு, அதில் கூறப்பட்டுள்ள நடைமுறையை தேச விரோத குற்றம் பதிவு செய்வதில் பயன் படுத்த வேண்டும் என கூறினார்.
கேதார் நாத் சிங் என்பவர் மீதான அந்த வழக்கில் நாட்டுக்கு எதிரான வன்முறையை தூண்டும் விமர்சங்களையும், வன்முறைக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிப்பதும் தேச விரோத குற்றச் சட்டத்தின் கீழ் வரும் என குறிப்பிடப் பட்டுள்ளது. அப்படி வன்முறையை தூண்டும் விதமாக இல்லாத குற்றங்கள் இந்த சட்டத்தின் கீழ் வராது எனவும் பூஷன் தனது வாதத்தில் தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “அரசுக்கு எதிரான விமர்சனங்கள் செய்வதோ, அரசின் செயல்களை விமர்சிப்பதோ, தேச விரோத குற்றச் சட்டத்தின் கீழ் வராது. காவல் துறையினர் இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதியும் முன் கேதார்நாத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை பின்பற்ற வேண்டும்” என தீர்ப்பளித்துள்ளனர்.