டெல்லி:
ஊடகவியலாளர்  அர்னாப் கோஸ்வாமி, தன்மீது பல மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்த உச்சநீதி மன்றம், அவரை கைது செய்ய மேலும் 3 வாரத்துக்கு தடையை நீட்டித்து உள்ளது. அத்துடன் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் தெரிவித்து உள்ளது.

மகாராஷ்டிராவில் இந்து துறவிகள்  சமூக விரோதிகளால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தொலைக்காட்சியில்  விவாதம் நடத்திய நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி,  இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன் பல்வேறு அவதூறுகளையும் அள்ளி வீசினார்.
இது காங்கிரசார் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அர்னாப் கோஸ்வாமி மீது, மும்பை காங்கிரசார் காவல்துறையினர் புகார் அளித்தனர். மேலும் பல மாநிலங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில்  அர்னாப் தாக்கல் செய்த மனுவில், ஏற்கனவே நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து,  அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  மேலும் இன்று இறுதிக்கட்ட விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது.
அதன்படி இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.
​​கோஸ்வாமிக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, விசாரணையை சிபிஐ போன்ற ஒரு நிறுவனத்திற்கு மாற்ற  வேண்டும் என வலியுறுத்தியதுடன்,  மேலும் காங்கிரசார் மிரட்டும் வகையில் செயல்படுகின்றனர்,  அவர்களுக்கு எதிரானவர்களின்  குரலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
வழக்கில் மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், மகாராஷ்டிரா அரசாங்க ஆலோசகரும், முன்னாள் அமைச்சருமான கபில்சிபல், சிபிஐ விசாரணை அவர்களின் (ஆளுங்கட்சி)  கைகளுக்கு செல்லும் என்று எதிர்ப்பு தெரிவித்ததோடு, அர்னாப் கோஸ்வாமி  விசாரணையின்போது, துன்புறுத்தப்பட வில்லை, அவரிடம், வழக்கு  தொடர்புடைய கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டதாகக் கூறினார்.
மேலும், கோஸ்வாமி “இந்த வகுப்புவாத வன்முறை மற்றும் வகுப்புவாத வெறுப்பை நிறுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
சோனியா காந்தியை அவதூறாகக் குற்றம் சாட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் விசாரணையை இடமாற்றம் செய்யுமாறு  அளித்த மனுவை உச்ச நீதிமன்றம்  நிராகரித்தது. மேலும், அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்களை ரத்து செய்யவும்,  நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும், அர்னாப் கோஸ்வாமி  கைது செய்யப்படுவதிலிருந்து இடைக்கால பாதுகாப்பை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.  இது  “19 1 (அ) கீழ் ஒரு பத்திரிகையாளரின் உரிமை… செய்தி ஊடகத்தால் பேச முடியாவிட்டால் நாட்டில்  குடிமக்கள் இருக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்து உள்ளது.