புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பெருந்தொற்றைச் சமாளிக்கும் நோக்கில் மத்திய அரசு தொடங்கிய பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைச் சமாளிக்கும் வகையில் கடந்த மார்ச் 28-ம்தேதி எம்.எம். கேர்ஸ் அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கியது.

இந்த அறக்கட்டளையில் தலைவராக பிரதமரும், உறுப்பினர்களாக உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சர்கள் இடம் பெற்றனர். இந்த அறக்கட்டளை தனியார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் ஆயிரக்கணக்கான கோடி நிதி அளித்தன.

இந்நிலையில் சிபிசிஎல் எனும் தனியார் தொண்டு நிறுவனம் பிஎம் கேர்ஸ் நிதி அனைத்தையும் தேசிய பேரிடர் நிதிக்குக் கொண்டு வரக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்எஸ் ரெட்டி, எம்.ஆர் ஷா அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஏற்கெனவே இந்த மனுவில் பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷன் ஆகியோர் வாதி்ட்டனர். இந்த வழக்கில் மத்தியஅரசு, மனுதாரர்கள் வாதம் முடிந்து கடந்த மாதம் 27-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு இந்த வழக்கில் வாதிடுகையில் “பிஎம் கேர்ஸ் நிதி என்பது பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை. யார் வேண்டுமானாலும் பங்களிப்பு செய்யலாம். ஆனால், பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு சட்டரீதியாக மாற்றலாம் என்பது தவறான கருத்து.

பிஎம் கேர்ஸ் நிதி என்பது தாமாக முன்வந்து நன்கொடை வழங்குவோரிடம் இருந்து பெறும் அறக்கட்டளையாகும். தேசிய பேரிடர் நிதி, மாநிலப் பேரிடர் நிதிக்கு வழக்கம்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதிடுகையில், “பிஎம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளிப்பவர்களைப் பற்றி சந்தேகப்படவில்லை. ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பிஎம் கேர்ஸ் நிதி இருக்கிறது.

தேசிய பேரிடர் நிதி அமைப்பு மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரியால் தணிக்கை செய்யப்படுகிறது. அதேபோன்று பிஎம் கேர்ஸ் நிதியும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையில் நீதிபதிகள் ஆர்எஸ் ரெட்டி, எம்.ஆர் ஷா அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், “ பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை மூலம் பெற்ற நிதியை தேசிய பேரிடர்நிதிக்கு மாற்ற மத்தியஅரசுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. தனிநபர்கள் தாமாக முன்வந்து அளிக்கும் நன்கொடைகள் எப்போதும் தேசிய பேரிடர் நிதிக்குத்தான் செல்கின்றன.

பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. மேலும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் பரவலைச் சமாளிக்க மத்திய அரசு வகுத்த திட்டங்கள் போதுமானதாக இருக்கின்றன. புதிதாக எந்தத்திட்டமும் தேவையில்லை.

பிஎம் கேர்ஸ் நிதி அறிக்கட்டளை மூலம் திரட்டப்பட்ட நிதி முற்றிலும் மாறுபட்டது. ஒருவேளை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு விரும்பினால் அதற்கு எந்தவிதமானத் தடையும் இல்லை.” எனத் தீர்ப்பளித்தனர்.