மும்பை:

காராஷ்டிராவில் நீடித்து வரும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி, நாளை மாலை 5 மணிக்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில்,  திடீர் திருப்பமாக கடந்த சனிக்கிழமையன்று (23-11.2019) காலை, யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் வகையில்,  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் திட்டமிட்டிருந்த நிலையில், பாஜக பதவி ஏற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி ரமணி தீர்ப்பை வழங்கினார். அப்போது, நாளை சட்டமன்றத்தில் பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

ஜனநாயகத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பு வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் இடைக்கால  சபாநாயகரை இன்று மாலைக்குள் நியமித்து, நாளை மாலை 5மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

உச்சநீதீமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆசோக்பூசன், சஞ்சீவ் கன்னா இந்த பரபரப்பு உத்தரவை பிறப்பித்து உள்ளது.

உச்சநீதி மன்றத்தின் இன்றைய உத்தரவு,  பாஜகவின் நடவடிக்கைக்கு சாவுமணி அளித்துள்ளது. அதேவேளையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் கூறப்படுகிறது.