திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் மற்றும் அறக்கட்டளை ஆகியவற்றின் 25 ஆண்டுகால வரவு செலவு கணக்கை தணிக்கை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டிலேயே பணக்காரக் கோயிலாகக் கருதப்படும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க ஒவ்வொரு மாதமும் 1.25 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், கொரோனா காரணமாக வருமானம் இழந்ததால், கோயில் செலவுக்கு 60 முதல் 70 லட்சம் வரையே கிடைக்கிறது.

கடுமையான நிதி சிக்கலில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி சிக்கியுள்ளதால், கோயில் நிர்வாகத்தை கவனிக்க நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு அறக்கட்டளையின் கணக்கு வழக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
நிர்வாக குழுவின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அறக்கட்டளை நிர்வாகிகள், அறக்கட்டளை என்பது கோயிலின் பூஜை புனஸ்காரங்களை கவனித்துக்கொள்ள திருவிதாங்கூர் மன்னர் வகையறாவால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும், இந்த அறக்கட்டளைக்கும் கோயிலின் அன்றாட நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மனுவில் கூறியிருந்தனர்.
2013 ம் ஆண்டு கோயில் அறக்கட்டளை வழங்கிய தணிக்கை விவரங்களின் அடிப்படையில் 2.87 கோடி ரூபாய் ரொக்கமாகவும் ரூபாய் 1.95 கோடி மதிப்பிலான சொத்தும் இருந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், 1965 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையிடம் எவ்வளவு பணம் மற்றும் கோயில் சொத்து உள்ளது என்பதைக் கணக்கிட வேண்டும் என்று நிர்வாகக் குழு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யு யு லலித் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய பெஞ்ச், அறக்கட்டளையின் வரவு செலவு கணக்கு முழுமையாக தெரிந்தால் மட்டுமே கோயிலின் நிதி நிலை குறித்து நிர்வாக குழுவினரால் தீர்மானமான முடிவுக்கு வரமுடியும் என்பதால் அவர்கள் வரவு செலவு கணக்கை கோருவது முறையானதே என்று கூறினர்.
மேலும், கோயில் மற்றும் அறக்கட்டளையின் வருமானத்தை மூன்று மாதங்களுக்குள் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் யு யு லலித், ரவீந்திர பட், பெலா திரிவேதி அடங்கிய அமர்வு தீர்பளித்ததோடு, அறக்கட்டளையின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
[youtube-feed feed=1]