டில்லி

ரண்டு மணி நேரம் மட்டுமே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியமான பண்டிகையான தீபாவளி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவலாகக் கொண்டாடப்படுகிறது.  இந்த பண்டிகை கொண்டாட்டங்களில் பட்டாசுகளும் முக்கிய இடம் பிடித்து வருகின்றன. தீபாவளி நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதற்காகத் தமிழ்நாட்டின் சிவகாசி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பல கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் இந்த பட்டாசு தொழிலை நம்பி சிவகாசியில் மட்டுமே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

உச்சநீதிமன்றத்தில்  தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுவதால் காற்று மாசு ஏற்படுவதாகவும், இதனால் மக்களுக்கு அதிக நோய்ப் பாதிப்பு ஏற்படுவதாகவும் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இதில் பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால் உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாகக் கூறி, அவற்றுக்குத் தடை விதிக்கக்கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் இந்த பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ” தீபாவளி பண்டிகையன்று வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வழங்கப்பட்ட அனுமதியே தொடர்கிறது”என்று உத்தரவிட்டனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து உள்ளது.